பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டம் ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவராத வகையிலும், 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
18 வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், மேற்கண்ட தண்டனைகள் அனைத்து தற்போது சட்டமாகியுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்றியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.