சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயேன் சுதா கோங்கரா படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எஸ்கே 25 பெயரிடப்பட்ட இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
பீரியாடிக் படமாக உருவாகி உள்ள பராசக்தி படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் அதர்வா கையில் கம்புடன் ஓடி வருகிறார். அவருக்காக காரில் ஸ்ரீலீலா காத்திருக்கிறார். ஒரு ட்ரங்க் கால் போட்டால் நானே வந்திருப்பேன் என்று கூற, ‘நான் வரலன்னா நீ செத்துருப்ப’ என்று ஸ்ரீலீலா தெலுங்கில் கூறுகிறார்.
இதை தொடர்ந்து கையில் துப்பாக்கி உடன் வரும் ரவி மோகன் சிவகார்த்திகேயனின் உருவ படத்தை பார்த்து சிரிக்கிறார். அவரை கொல்ல வேண்டும் என்று ரவி மோகன் முயற்சித்து வருகிறார் என்பதை அதில் உள்ள துப்பாக்கி குண்டு துளைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
பின்னர் சிவகார்த்திகேயன், கல்லூரியின் மாடியில் நின்று மாணவர்களின் கூட்டத்தை பார்த்து ‘ சேனை ஒன்று தேவை.. பெருஞ்சேனை ஒன்று தேவை’ என்று ஆவேசமாக கூறுகிறார்.. ‘மாணவர்களை தொடாதே’ என்ற வாசகத்துடன் டீசர் முடிகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்த படத்தில் சூர்யா நடிக்க விருந்தார். இந்த படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட்டது. எனினும் சில காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.