மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆன நிலையில், தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. நாடியாவின் ஹரிங்காட்டாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அப்ளைடு சைக்காலஜி துறையின் பேராசியரும், முதலாம் ஆண்டும் மாணவனும் கழுத்தி மாலை அணிந்து மணக்கோளத்தில் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மாணவன் ஆசியரியருக்கு தாலி கட்டி நெற்றியில் குங்குமம் இட, மாணவர்களும் சக ஊழியர்களும் ஆரவாரம் செய்வது, செல்பி எடுப்பது, திருமணத்தை கொண்டாடுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இந்த குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பெண் பேராசிரியர் பாயல் பானர்ஜி கூறுகையில், வகுப்பிற்குள் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஷாட் ஃபிளிம்க்காக என்னை முக்கிய கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டனர், நான் ஒப்புக்கொண்டேன். மற்ற ஆசிரியர் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் எனது முதலாம் ஆண்டு மாணவர்களும் ஸ்கிரிப்ட் படி நடித்தோம். அதில் பெரிதாக எதுவும் இல்லை. மேலும் சிலர் அதை எனக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, என்னை பிடிக்காத சக ஊழியர் ஒருவர் வேண்டுமென்றே கிளிப்பை கசியவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து, பல்கலை துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறியதாவது: துறை தலைவர் மீது, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. வகுப்பில் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒரு பாடதிட்டத்திற்காக நடிப்பதாக பேராசிரியர் வாய்மொழியாக கூறினார். அது உண்மையிலேயே ஒரு திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் முழு உண்மையும் தெரியவரும். அதுவரை இந்த சம்பவம் விவாதப் பொருளாகவே இருக்கும். சமூக வலைதளங்களில் மக்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். இது பேராசிரியையின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும், பல்கலைக்கழகத்தின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
Read more : பிப்.1 முதல் இந்த UPI ஐடி மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாது.. NPCI எடுத்த அதிரடி முடிவு..!!