எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுக கூட்டணி குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அமர்ந்து பேசினால் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் கூறுகிறார். தொண்டர்கள் கருத்து சொல்லலாம். ஆனால், முடிவை எடப்பாடி பழனிசாமி எடுப்பார்.
அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை ஊடகத்தினர் முன்பு தெளிவாக சொல்லியுள்ளார். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது மற்றும் அதிகாரப்பூர்வமானது. மற்றவர்கள் கூறுவதை பார்க்கலாம், ரசிக்கலாம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவரிடம், அதிமுக – தமிழக வெற்றிக் கழக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் எந்த மூலையில் இருந்தால், அதற்கு அதிமுக ஆதரவு தரும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் விரைவில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.
Read More : தேர்தலை மனதில் வைத்து பீகாருக்கு மட்டும் அறிவிப்பு..!! தமிழ்நாட்டிற்கு ஏன் இல்லை..? எடப்பாடி பழனிசாமி கேள்வி