உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 38 வயதான முகம்மது ஆரிப். இவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வெள்ளமுண்டா பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன், அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயதான முஜீப் என்பவரும் வசித்து வந்துள்ளார்.
ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தனியாக வசித்து வரும் முஜீப், முகம்மது ஆரிப் குடும்பத்தினரிடம் நெருங்கி பழகியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில், தனது மனைவிக்கும் முஜீப்பிற்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் முகம்மது ஆரிப்பிற்கு எழுந்துள்ளது. இதனால், அவர் தனது மனைவியிடம் நேரடியாகவே கேட்டுள்ளார். ஆனால், இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இது தொடர்பாக, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை முகம்மது ஆரிப் 2 பெரிய பேக்குகளுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது திடீரென, மூளித்தோடு ஆற்றுப்பாலம் அருகே ஆட்டோவை நிறுத்துமாறு முகம்மது ஆரிப் கூறியுள்ளார். இதனால் ஆட்டோ டிரைவரும் ஆட்டோவை நிறுத்திய நிலையில், முகம்மது ஆரிப் தான் எடுத்து வந்த 2 பேக்குகளையும் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்.
இதனால், ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இது குறித்து உடனடியாக வெள்ளமுண்டா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட 2 பேக்குகளையும் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அந்த பேக்குகளில், மனிதனுடைய வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்துள்ளது.
இதையடுத்து, முகம்மது ஆரிப்பை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பேக்குகளில் இருந்தது முஜீபின் உடல் பாகங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அவர் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் முஜீப்பை எப்படி கொலை செய்தார், யாரேனும் கூட்டு சேர்ந்து கொலை செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.4-ல் போராட்டம்..!! – சிபிஐ (எம்) அதிரடி அறிவிப்பு