தங்கப் பத்திரத் திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1 கிராம் மதிப்புக்கு தங்கப் பத்திரத்தை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள். தங்கம் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இடையில், தங்கப் பத்திரங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கவும் முடியும்.
இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருப்பதால் தங்கப் பத்திரங்களுக்கு இந்திய மக்கள் சிறப்பான வரவேற்பளித்து முதலீடு செய்தனர். கடைசியாக 2024 பிப்ரவரியில் தங்க பத்திர வெளியீடு நடந்தது. அம்மாதம் 12ம் தேதி தொடங்கி 16ம் தேதி தங்க பத்திர வெளியீடு நிறைவடைந்தது. ஒரு கிராம் ரூ.6,262 என்ற விலையில் பத்திர வெளியீடு நடந்தது. அதன் பிறகு இது வரையிலான காலத்தில் எந்தவொரு தங்க பத்திர வெளியீடும் நடைபெறவில்லை.
இதற்கிடையில் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியை அரசு குறைத்தது. இதனால் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் கசிந்தன. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத் கூறுகையில், “சந்தையில் இருந்து கடன்களை திரட்டுவதற்கும், பட்ஜெட்டுக்கு நிதியளிப்பதற்கும், ஒரு கட்டத்தில், இந்த சொத்து வகை ஆதரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்தும் எடுக்கப்படும் முடிவுகள் இவை. இது அரசாங்கத்திற்கு மிகவும் அதிக செலவைக் கொண்ட கடன் வாங்கலாகும். இதன் விளைவாக, அரசாங்கம் அந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளது” என விளக்கினார்.
SGB ஏன் பிரபலமான முதலீடாக இருந்தது?
- முதலீட்டாளர்கள் தங்கத்தை முன்கூட்டியே வாங்கி, விற்கும்போது அதன் சந்தை விலையைப் பெறுவார்கள்.
- சேமிப்பு அபாயங்கள் இல்லாததால், SGBகள் தங்கத்தை வைத்திருப்பதை விட சிறந்தவை.
- முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலையுடன் கூடுதலாக வட்டியையும் ஈட்டினர்.
- நகைகளைப் போலன்றி, எந்தவிதமான கட்டணங்களோ அல்லது தூய்மைப் பிரச்சினைகளோ இல்லை.
- பத்திரங்கள் ரிசர்வ் வங்கி பதிவுகளிலோ அல்லது டிமேட் வடிவத்திலோ வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை இழக்கும் அபாயம் இல்லை.