காதல் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரை நடுரோட்டில் வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹெப்பகோடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமையா லே – அவுட் பகுதியில் மோகன் – கங்கா தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மோகன் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில், மனைவி கங்காவுக்கும் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதாக மோகனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் கோபமடைந்த மனைவி கங்கா, “இனி உன்னுடன் வாழ முடியாது” எனக்கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே, குழந்தையை பார்ப்பதற்காக மோகன் அங்கு சென்றுள்ளார். ஆனால், குழந்தையை காண்பிக்க கங்கா மறுத்து வந்துள்ளார்.
இதனால், மோகன் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அப்படி வழக்கம்போல குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் கங்கா. அப்போது நடுரோட்டில் அவரை வழிமறித்த மோகன், தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் காதல் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கங்கா சரிந்து விழுந்தார்.
பின்னர், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், கணவர் மோகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : பரபரப்பை கிளப்பிய விமானம்..!! கோவையில் அரை மணி நேரமாக வானத்தில் வட்டமடித்தது ஏன்..?