இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 30-க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பெற்றோர்களுக்கே தெரியாமல், அவர்களது குழந்தைகள் செல்போன்களை எடுத்து பணம் செலுத்தி கேம் விளையாடி வருகின்றனர். இதனை தடுக்க பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டை முறைப்படுத்துவது, விளையாட்டு அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இதற்கிடையே, ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது, சிறுவர்களை அதில் இருந்து மீட்பது தொடர்பான பரிந்துரைகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு அரசிடம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், விதிகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும். நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை பயனர்களை கேமிங் விளையாட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.