Plane crash: கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ்4819 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 80 பேர் இருந்தனர்.
அவசரகால குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பியர்சன் விமான நிலைய எக்ஸ் பதிவில், விபத்தை உறுதிப்படுத்தி, நிலைமை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் அறிக்கையை வெளியிட்டது. “அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, விபத்து கடுமையானதாக இருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் முழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறா, விமானியின் பிழையா அல்லது எதிர்பாராத பிற காரணங்களால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதே விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.