தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் தலைவர் முஸ்தபா மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தான் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த அக்டோபர் கட்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திய விஜய் தனது கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் அறிவித்தார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.
அப்போது திமுகவை கடுமையாக சாடிய விஜய், பாஜகவையும் மேம்போக்காக விமர்சித்தார். ஆனால் அதிமுகவை பற்றி எதுவுமே பேசவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணி யாருடன் அமைத்துக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நேற்று புஸ்ஸின் ஆனந்த் உடனான சந்திப்பின்போது விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து கூறியதாகவும், கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என கூறியதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.