மத்திய நைஜீரிய நைஜர் மாநிலத்தில் பேருந்து ஒன்று பெட்ரோல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாநிலத் தலைநகர் மின்னாவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள குசோபோகி கிராமத்திற்கு வெளியே மற்றொரு பேருந்தை ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றபோது, பயணிகள் பேருந்து எதிரே வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் வேகமும், முந்திச் சென்றதும் தான் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். நைஜீரிய பொருளாதார தலைநகரான லாகோஸிலிருந்து வடக்கு நகரமான கடுனாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
நைஜீரியாவின் மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகளில், அதிக வேகத்தாலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த வாரம், வடக்கு நகரமான கானோவில் பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்று FRSC தரவுகள் தெரிவிக்கின்றன.