தமிழ்நாட்டில் உள்ள கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பலவற்றுக்கும், நிலங்களை சிலர் தானமாக வழங்கியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவைகளுக்கு கோவில் பெயரில் முறையாக பட்டா பெறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, அரசியல்வாதிகள் உதவியுடன் பட்டா பெற முயற்சிக்கின்றனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையின் நடவடிக்கையால் சில நிலங்கள் ‘கோவில்’ என்ற வகைபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், அதில் வசித்து வருவோரும் பட்டா பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டில் பட்டா வழங்குவதற்கான வரன்முறை திட்டத்தில் கோவில் நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘கோவில் நிலங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் பட்டா வழங்க மாட்டோம்’ என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பட்டா வழங்குவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அதன்படி, ‘கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க முடியாது. அதேபோல், ‘கோவில்’ வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும், பட்டா வழங்கப்படாது’ என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.