BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் BAD GIRL டீசர் பட விவகாரத்தில் டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது ஏன் காவல்நிலையத்தில் புகார் தரவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி, படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம், தற்போது தயாரித்துள்ள படம்தான் ’பேட் கேர்ள்’. இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வர்ஷா பரத் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த டீசரில், தோழிகளிடம் தனது மனதினைக் கவர்ந்த இளைஞர் குறித்தும் அவனிடம் தன்னை கவர்ந்த விஷயங்கள் குறித்து பேசும் இளம்பெண், ஒரு இளைஞனிடம் நெருங்கிப் பழகும்போது, தனது மனதில் பட்டதைப் பேசுகிறாள். குறிப்பாக, நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பியா என இளைஞரிடம் கேட்கிறார். அதேபோல் உனக்கு எப்போது முதல் முறையாக பீரியட்ஸ் வந்தது என அந்த இளைஞன் கேட்கிறான்.
இந்த டீசர் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதனை இணையத்தில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரி, மதுரை வெங்கடேஷ், ராம்குமார் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
‘பேட் கேர்ள்’ படம் பெண்ணியம் குறித்துப் பேசவில்லை என்றும், ஒழுங்கற்ற ஆபாசமான நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் அதிகமாக உள்ளதாகவும் தமது மனுவில் கூறியிருந்தனர். இதுபோன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆபாச டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் BAD GIRL டீசர் பட விவகாரத்தில் டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது மனுதாரர் ஏன் காவல்நிலையத்தில் புகார் தரவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.