நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அந்த வகையில் மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு தொடர்பாக போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்து திட்டத்திற்கு ஆய்வு நடத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதாவது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்கிட ஆய்வுகள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் வாசித்தார். அதன்படி தமிழ்நாட்டில் 3 வழித்தடங்களில் இந்த ரயில் சேவையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை- செங்கல்பட்டு-திண்டிவனம் மற்றும் சென்னை-காஞ்சிபுரம்-வேலூர், கோவை-திருப்பூர்-ஈரோடு- சேலம் என மொத்தம் 3 வழித்தடங்களில் இந்த ரயில் சேவையை தொடங்க ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மகளிரின் பங்குபற்றலை மேலும் அதிகரிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் பெரிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 20% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்றுத் தொழில் தொடங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும், தொழில்முனைப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் விற்பனை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தத் திட்டத்திற்காக ரூ.225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மகளிரின் பொருளாதார முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.