மிகவும் பிரபலமான காய்களில் ஒன்று பீட்ரூட். சிலருக்கு பீட்ரூட் பிடித்தாலும், பலருக்கு பீட்ரூட் சிறிதும் பிடிக்காது. இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் இருந்து வரும் ஒரு வகையான வாசனை தான். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பீட்ரூட்டை சாப்பிடுவது கிடையாது. ஆனால் பீட்ரூட்டில் உள்ள பல சத்துக்கள், வேறு எந்த காய்கறியிலும் கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், பீட்ரூட்டில் புரதம், கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதய ஆரோக்கியம் மேம்படும், மலச்சிக்கல் குணமாகும், சிறுநீரக பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும்.
மேலும், பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். அல்சரால் அவதிப்படுபவர்கள், பீட்ரூட் ஜூஸில் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். இப்படி பல்வேறு நன்மைகளை கொண்ட பீட்ரூட்டை நாம் சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு தான் நஷ்டம். அந்த வகையில், பீட்ரூட் பிடிக்காதவர்களை கூட சுண்டி இழுக்க சிறந்த வழி ஒன்று உள்ளது.
ஆம், பீட்ரூட்டில் நாம் மால்ட் தயாரித்து பாலில் கலந்து கொடுத்தால் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பீட்ரூட் மால்ட் தயாரிக்க தேவையான பொருள்கள், பீட்ரூட் – 500 கிராம், நாட்டு சர்க்கரை – 500 கிராம், பாதாம் – 100 கிராம், முந்திரி – 50 கிராம், ஏலக்காய் – 6, தண்ணீர் – தேவையான அளவு.
முதலில், பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலை நீக்கிவிட்டு, மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன், முந்திரி மற்றும் ஏலக்காயையும் சேர்த்து வறுத்து, பொடி செய்து வைத்துக்கொளுங்கள். இப்போது சுத்தம் செய்த பீட்ரூட்டை, சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து விடுங்கள். இப்போது, ஒரு கடாயில் பீட்ரூட் விழுது மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு அல்வா பதத்திற்கு கிளறி விடுங்கள்.
பின்னர், வதக்கிய கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பின்னர், நாம் முதலில் பொடித்து வைத்த பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சுவையான பீட்ரூட் மால்ட் ரெடி.. இப்போது இந்த பீட்ரூட் மால்ட் பொடியை, சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்.