நாட்டில் தரமான உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்த இந்தியாவின் சிறந்த தரவரிசைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தின் ஷூலினி பல்கலைக்கழகத்துடன் சி.எஸ்.சி அகாடமி இணைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இளங்கலை, முதுகலை படிப்புகளை வழங்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. சி.எஸ்.சி அகாடமியின் இந்த முயற்சி கல்வி இடைவெளியை நீக்கும். தொழில்துறைக்கு ஏற்ற திறன்கள் மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக அமையும். குறிப்பாக முதல் தலைமுறை கற்பவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும்.
இந்த முன்முயற்சியின் மூலம், பொதுச் சேவை மைய செயற்பாட்டாளர்கள் (கிராம அளவிலான தொழில்முனைவோர்) மாணவர் பதிவுகளை எளிதாக்குவார்கள். தொலைதூரப் பகுதிகளில் கூட ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி எளிதில் கிடைப்பதை உறுதி செய்வார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆயிரக்கணக்கான கற்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, நாட்டின் தொழிலாளர் சக்தி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும்.
பி.பி.ஏ. (இளங்கலை வணிக நிர்வாகம்), பி.சி.ஏ (இளங்கலை கணினி பயன்பாடு), எம்.பி.ஏ. (முதுகலை வணிக நிர்வாகம்), எம்.சி.ஏ. (முதுகலை கணிணி பயன்பாடு), எம்.ஏ (ஆங்கில இலக்கியம்) ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.