Trump-Putin: உக்ரைனுடனான போர் நீடித்த அமைதியுடன் முடிவடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் புதின் உடன் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம் என டிரம்ப் தெரிவித்தார். கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் நேற்று(செவ்வாய் கிழமை) பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தொலைப்பேசி வாயிலாக 90 நிமிடங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெள்ளை மாளிகையும் கிரெம்ளினும் உறுதிப்படுத்தின, ஆனால் இரு தரப்பினரும் உடனடியாக விவாதத்தின் சாராம்சம் குறித்த விவரங்களை வழங்கவில்லை.
மேலும், புதினும் டிரம்பும் இப்போது தங்கள் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதால், வரும் நாட்களில் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாஸ்கோ போர் நிறுத்தத்திற்கு முழுமையாக உறுதியளிக்குமா மற்றும் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவால் வடிவமைக்கப்படும் விதிமுறைகளை கியேவ் ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து கேள்விகள் உள்ளன.