மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “எக்காரணம் கொண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாயினும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதேசமயம், இருமொழிக் கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களின் வழிக் கொள்கையும் இதுதான்; விழிக் கொள்கையும் இதுதான்.
இன மானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் அடிமைகள் நாங்கள் அல்ல. இது பணப் பிரச்சனை அல்ல; இனப் பிரச்சனை. மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்த பாதை சரி என அண்டை மாநில நினைக்கின்றன” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “டெல்லி செல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இருமொழிக் கொள்கை பற்றி அவரிடம் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.