கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமணன். இவர், நேற்று முன்தினம் நாகர்கோவில் கோர்ட் சாலையில் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களும், ஒரு வாலிபரும் லட்சுமணனிடம் சென்று பேசியுள்ளனர். அப்போது, “எங்களிடம் இளம்பெண் ஒருவர் இருப்பதாகவும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.1,500 கொடுத்தால் போதும்” எனக்கூறியுள்ளனர்.
பின்னர், அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனே வடசோி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், வந்திருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் என தெரிந்ததும், 2 பெண்களும், அந்த வாலிபரும் தப்பியோட முயற்சித்தனர்.
ஆனால், அவர்களை சுற்றி வளைத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை மீட்டு விசாரிக்கையில், நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் என்பதும், அவரிடம் பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில், கொடைக்கானலை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 27), அவரது மனைவி அனு என்ற ராகவி (25), நாகர்கோவிலை சேர்ந்த சந்திர என்ற விஜயகுமாரி (56) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.