தஞ்சையில் அண்ணா சிலை மீது திமுக மற்றும் பாஜகவின் கொடிகளை இணைத்து போர்த்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலையில் அண்ணா புத்தகம் படிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சையின் அடையாளமாக இந்த இடம் உள்ளது. இந்நிலையில் தான், இன்று காலை அண்ணா சிலையின் கழுத்தில் கட்சிக்கொடிகள் போர்த்தப்பட்டிருந்தன.
அதில், திமுக மற்றும் பாஜகவின் கொடிகளை இணைத்து அண்ணாவின் போடப்பட்டிருந்தது. அரசியலில் திமுகவும், பாஜகவும் எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது இரண்டு கட்சிக் கொடிகளையும் இணைத்து அண்ணா சிலை மீது போர்த்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அங்கு விரைந்து வந்த போலீசார், அண்ணா சிலையின் கழுத்தில் இருந்த திமுக – பாஜக கொடிகளை அகற்றினர். மேலும், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.