வங்கக்கடலில் நிலவும் மேலெடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.