ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும். அப்படி முடியாவிட்டால், அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிட்டால், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் மீதான குற்றங்களை மாநில அரசுகள் நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆளுநருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பினை தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.