ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை தீவிரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாகும். இந்த தாக்குதலின் பின்னர், சுற்றுலா பயணிகள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பலர் தங்களின் ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர். சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்கள், முன்பதிவுகள் ரத்து செய்யும் அழைப்புகளை அதிக அளவில் பெறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ஏர்இண்டியா மற்றும் இன்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள், ஸ்ரீநகரிலிருந்து டெல்லி மற்றும் மும்பை நோக்கி கூடுதல் விமானங்களை இயக்குகின்றன. மேலும், பயணிகளுக்கு கட்டண விலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த தாக்குதல், காஷ்மீரின் சுற்றுலா துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்களின் பயண திட்டங்களை மாற்றி, பாதுகாப்பான இடங்களைத் தேடி வருகின்றனர்.
Read more: பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு..!! முன்பக்கங்களை கருப்பு நிறத்தில் அச்சிட்டு செய்திகளை வெ