மே 1ஆம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் இருக்கிறது. சாதாரண நாட்கள் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். பொங்கல், தீபாவளி நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் விற்பனை நடக்கும்.
அதேபோல், வருடத்தில் 10 நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. திருவள்ளுவர் தினம் ஜனவரி 15, குடியரசு தினம் ஜனவரி 26, மே 1 தொழிலாளர் தினம், வள்ளலார் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக். 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் டாஸ்மாக் மூடப்படுகிறது. மேலும் தேர்தல், அசாதாரண சூழ்நிலைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அந்த வகையில், மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல் பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.