மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான நீரால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. அங்கு 6 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த மரணம் உள்ளூர் மக்களிடையே கோபத்தையும் போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் உள்ள மராத்தி மொஹல்லாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குழந்தையின் தாய் சாதனா சாஹு, வீட்டு விநியோகக் குழாய் நீரில் கலக்கப்பட்ட பாலைக் குடித்த பிறகு, குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
அந்தக் குழந்தை முதலில் ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தனர். 10 வருடப் பிரார்த்தனைகளுக்குப் பிறகு அந்தக் குழந்தை பிறந்ததாக கண்ணீர் மல்க தாய் கூறினார்.. மேலும் பலமுறை புகார் அளித்தும் தங்கள் பகுதிக்கு அசுத்தமான, சாக்கடை போன்ற நீர் தொடர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
தனது 10 வயது மகளுக்கும் வயிற்று வலி ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும், அதே அசுத்தமான நீரால் தான் இது ஏற்பட்டதாகக் குடும்பத்தினர் நம்புவதாகவும் அவர் கூறினார்.
பகீரத்புரா பகுதியில் நிலவி வரும் பெரிய அளவிலான நீர் மாசுபாடு நெருக்கடிக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, பகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. ஒரு குழாய் உடைப்பு காரணமாக கழிவுநீர் குடிநீருடன் கலந்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம். இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதுக் குழுக்களையும் சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளது.
பல நாட்களாகப் புகார்களை இந்தூர் மாநகராட்சி புறக்கணித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்ட முதலமைச்சர் மோகன் யாதவ், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாநகராட்சி நிர்வாகம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவிப் பொறியாளரை இடைநீக்கம் செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளது.
இதனிடையே, சுகாதாரத் துறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளோரினேஷன் அளவை அதிகரித்துள்ளதுடன், பாதுகாப்பான குடிநீரை வழங்க தண்ணீர் டேங்கர்களும் அனுப்பப்பட்டுள்ளன.



