பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Nino) தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், பெருங்கடலின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொதிநிலையை அடைந்துள்ளது. குறிப்பாக பெரு நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் நீர் இயல்பான அளவை விட மிகக் கடுமையாகச் சூடாகி வருகிறது.
பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. பெரு நாட்டின் கடலோரப் பகுதிகளில் மேற்பரப்பு நீர் வெப்பநிலை இயல்பை விட 8.9°C வரையிலும், கடலின் ஆழமான பகுதிகள் 10.5°C வரையிலும் உயர்ந்துள்ளன. மேலும், மத்திய பசிபிக் பகுதியில் சுமார் 150 மீட்டர் ஆழம் வரை 25°C-க்கும் அதிகமான வெப்பம் ஊடுருவியுள்ளது.
தீவிரமடையும் எல் நினோ குறியீடுகள்:
எல் நினோவின் தாக்கத்தைக் கண்காணிக்கும் சர்வதேசக் குறியீடுகளான Nino-3.4 (+2.1°C), Nino-3 (+3.0°C) மற்றும் தென்னமெரிக்கக் கடலோரப் பகுதியான Nino-1+2 (+3.9°C) ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளன. அட்மாஸ்பியர் எனப்படும் வளிமண்டலக் காற்றோட்டமும் கடல் வெப்பமயமாதலும் இணைந்து எல் நினோவின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்து வருகின்றன.
அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையத்தின் கூற்றுப்படி, இந்த எல் நினோ நிகழ்வு 2026 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும், 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலும் நீடிக்க அதிக வாய்ப்புள்ளது. 1950 முதல் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகக் கடுமையானதாக இருக்க 83 சதவீத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாறு காணாத வெப்பநிலை உயர்வால் உலக அளவில் மழைப்பொழிவு இயல்பு நிலையை இழந்து, சில பிராந்தியங்களில் கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் பெருமழையும் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.



