கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). இவர் திமுக உறுப்பினரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார். இவரிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதை அறிந்த மர்ம கும்பல், இவரை கடத்தி பணம் பறிக்க முயன்றது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அக்கும்பலை சேர்ந்த ஒரு பெண், சீதாராமனுக்கு போன் செய்து நிலம் தொடர்பாகப் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சீதாராமன், உடனடியாக தன்னுடைய காரில் சூளகிரியிலிருந்து ஓசூர் அருகே உள்ள பத்தளப்பள்ளிக்குப் புறப்பட்டுள்ளார். அந்த பெண், வீட்டிற்கு போய் விரிவாக பேசலாம் என்றும் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற சீதாராமனை 7 பேர் கொண்ட் கும்பல் ரூமில் கட்டி வைத்து, அடித்து உதைத்துள்ளனர். 5 கோடி ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். இரவு முழுவதும் தாக்கிய நிலையில், செல்போனை கொடுத்து, “உன் நண்பர்களிடம் பேசி பணத்தை கொண்டு வரச்சொல் ” என்று சொல்லி உள்ளனர்.
செல்போனை வாங்கிய சீதாராமன் தன்னுடைய நண்பர் லட்சுமிபதிக்கு போன் செய்துள்ளார். அப்போது கடத்தல் கும்பலுக்குத் தெரியாமல், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனை ஷேர் செய்துவிட்டார். உடனே நண்பர் லட்சுமிபதியும், அந்த லொகேஷனை சீதாராமனின் குடும்பத்தினருக்கு அனுப்பி விஷயத்தை சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைநத் குடும்பத்தினர், மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல், சீதாராமனை அவரது காரிலேயே வைத்து வேறு பகுதிக்குக் கடத்திச் செல்ல முயன்றனர். பின்னாடியே விரட்டிச் சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சங்கர் (38), சுரேஷ் (40), அஜய் (19), கோகுலகண்ணன் (23) ஆகிய நான்கு பேரையும் மடக்கிப் பிடித்ததுடன், சீதாராமனையும் பத்திரமாக மீட்டனர். கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வேதா என்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read more: Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!



