மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள்.
ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன.
தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு மற்ற முன்முயற்சிகளையும் ரயில்வே மேற்கொண்டுள்ளது. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கீழ் படுக்கையை ஒதுக்க கணினி மூலம் பயணிகள் முன்பதிவு முறையில் வகை செய்யப்பட்டுள்ளது.
அதற்கான விருப்பத்தேர்வு இல்லாத நிலையிலும் முன்பதிவு செய்யும்போது உள்ள இடங்களைப் பொருத்து ஒதுக்கப்படும். தூங்கும் வசதியைக் கொண்ட ஒரு பெட்டியில் 6 முதல் 7 கீழ் படுக்கைகளும், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் 4 முதல் 5 கீழ் படுக்கைகளும், இரண்டடுக்கு குளிரசாதனப் பெட்டியில் 3 முதல் 4 கீழ் படுக்கைகளும் மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது



