மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 153 தொழிற்பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் அதிகபட்சமாக 26 இடங்கள், மகாராஷ்டிராவில் 23 இடங்கள், தமிழ்நாட்டில் 19 இடங்கள், மற்றும் ராஜஸ்தானில் 18 இடங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* தொழிற்பயிற்சி சட்டம் 1973-ன் கீழ், 1 ஆண்டு காலத்திற்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
* இந்த பயிற்சிக்கு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* AICTE / DOTE / UGC ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், முழுநேர கல்வி முறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* மேலும், ஜூலை 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் கல்வியை முடித்து பட்டச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
* விண்ணப்பதாரர்கள் இதற்கு முன்பு எந்த நிறுவனத்திலும் தொழிற்பயிற்சி பெற்றிருக்கக் கூடாது.
* அதேபோல், முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் 1 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணியனுபவம் உள்ளவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.12.2025 நிலவரப்படி,
- குறைந்தபட்ச வயது: 21
- அதிகபட்ச வயது: 28
தேர்வு செய்யப்படும் முறை: யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் மற்றும் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு இமெயில் மூலம் அனுப்பப்படும். அழைப்பு பெறும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட தேதியில் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். சான்றிதழ்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் http://www.nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் ”UNITED INDIA INSURANCE COMPANY LTD” என்ற பெயரில் இடம்பெற்று இருக்கும் அறிவிப்பிற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2026.
Read more: திடீரென தவெகவை அட்டாக் செய்யும் அதிமுக.. கண்டுகொள்ளாத விஜய்.. இபிஎஸ் கனவு பலிக்குமா?



