உயில் எழுதாமல் இறந்த இந்துப் பெண்ணின் சொத்து, கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத சமயத்தில், அவளுடைய குடும்பத்திற்கு செல்லாது; அதன் வாரிசுகள் அவரது கணவரின் குடும்பத்திற்கே உரியதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15(1)(b) அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான விசாரணையில் இந்தக் கருத்துக்கள் வந்தன.
நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது. “இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி, திருமணத்திற்கு பிறகு பெண்ணின் ‘கோத்திரம்’ மாற்றப்படுகிறது. அவளின் பெயர் மாறி, பொறுப்புகள் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தகுதி பெறுகிறது. அவள் தன் பெற்றோர் அல்லது சகோதரர்களிடமிருந்து பராமரிப்பு கோர முடியாது.” என்றனர்.
நீதிமன்றம் தென்னிந்தியாவில் நடைபெறும் சடங்கு திருமண நடைமுறைகளை எடுத்துக்காட்டி, திருமணம் செய்யப்பட்டவுடன், கோத்திரம் மாறும் நடைமுறை சமூக ரீதியாக ஏற்கப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியது. மனுதாரரை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரிவு 15(1)(b) பாரபட்சமானது என்று வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “ஆண்களுக்கு சொத்து குடும்பத்திற்கே செல்கிறது. ஆனால் பெண்களின் சொத்து, குழந்தைகள் பிறகு, ஏன் கணவரின் குடும்பத்திற்கே செல்ல வேண்டும்? இது பாரபட்சமானது.” என்றார். பெஞ்ச் “மிக கடினமான பழக்கவழக்கங்களை மாற்ற சட்டம் வழிவகுக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நடைமுறையை உடைக்க நாங்கள் விரும்பவில்லை.” எனக் கூறியது.



