ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் தனுஷின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
குடும்பத்தினர் அல்லது மற்றவர்களின் உதவியுடன் திரையில் அறிமுகமான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்… ஆனால் சிலர் மட்டுமே அதில் நிலைத்து நின்றிருக்கிறார்கள். அந்த வகையில் தனது ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் தோற்றத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு, அனைத்தையும் தகர்த்து உச்சத்தை அடைந்த நடிகர்களில் நடிகர் தனுஷும் ஒருவர்.
2002 ஆம் ஆண்டு தனது தந்தை பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ்.. ஆனால் இந்த படம் வெளியான போது தனுஷ் பல விமர்சனங்களை எதிர்க்கொண்டார்.. மற்ற ஹீரோக்களை போல உடல் தோற்றம் இல்லை என்றாலும், அவரிடம் சிறந்த நடிப்புத் திறமை இருந்தது.
பின்னர் தனுஷின் சகோதரர் செல்வ ராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு, தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதே ஆண்டு வெளியான திருடா திருடி படம், தனுஷின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். பின்னர் புதுக்கோட்டையிருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையைக் கண்டேன், அது ஒரு கனா காலம் போன்ற படங்கள் தோல்வியடைந்ததால், அவரது திரை வாழ்க்கை எதிர்காலம் கேள்விக்குறியாகியது.
மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2006 இல் வெளியான அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை என்றாலும், பின்னாளில் கொண்டாடப்பட்டது இந்த படம் இன்னும் தமிழ்த் திரையுலகின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பின்னர், வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் தனுஷுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளியான யாரடி நீ மோகின் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
உத்தம புத்திரன், படிக்காதவன், குட்டி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஆடுகளம் படத்தில் தனுஷ் அனுபவம் வாய்ந்த நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றார். பின்னர் மூணு படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடல் தனுஷை உலகளவில் பிரபலப்படுத்தியது.
மூணு படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, நானும் ரவுடி தான், காக்கா முட்டை, இன்னூறு என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தயாரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்த தனுஷுக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்களில் நடித்து உலக அளவில் அங்கீகாரம் பெற்ற நடிகரானார் தனுஷ். கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் தனுஷ். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.
சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அனிருத் போன்ற பல திறமையானவர்களை அறிமுகப்படுத்திய பெருமை தனுஷுக்கு உண்டு. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் அல்லது இயக்குநராக தனுஷ் தனது அனைத்து அவதாரங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் தனுஷ் இன்று, ஜூலை 28, தனது 42 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த சூழலில், தனுஷின் சொத்துக்களின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் சொத்துக்கள் 250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது கடைசி படமான குபேராவிற்கு 30 கோடி சம்பளம் வாங்கினார்.
நடிப்பைத் தவிர, தனுஷ் பிராண்ட் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு பிராண்டிற்கும் ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
தனுஷிற்கு சென்னை போயஸ் கார்டனில் ஒரு ஆடம்பரமான பங்களா உள்ளது. அதன் மதிப்பு 150 கோடி ஆகும்.. சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வீடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த சொத்து ஒரு அடையாளமாக உள்ளது. மேலும் தனுஷிடம் ஜாகுவார், ஆடி, பென்ட்லி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன. தனுஷ் நவம்பர் 18, 2004 அன்று ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். 14 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.
தனுஷ் தனது நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். குறிப்பாக 4 தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். ஆடுகளம், அசுரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், காக்கா முட்டை, விசாரணை படங்களுக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதுகளையும் அவர் வாங்கி உள்ளார்.. மேலும் 8 பிலிம்ஃபேர் விருதுகள், 14 SIIMA விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்களில் ஒருவராக மாறியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..