மதுரையில் பட்டதாரி இளைஞர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற ஒருவர் புறக்காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, திறந்து கிடந்த புறக்காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.
பின்னர், ஏற்கெனவே தயாராக எடுத்துச் சென்ற கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி, புறக்காவல் நிலையத்துக்கு உள்ளேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பதறிப்போன வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அங்கு சென்று, புறக்காவல் நிலையத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி, தீயை அணைத்த னர். எனினும், பலத்த தீக்காய மடைந்திருந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலில் தீ வைக்கும்போது கோஷம் எழுப்பியது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பூர்ணசந்திரன் (40) என்று தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். மேலும், பகுதி நேரமாக பழங்கள் விற்றுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.



