புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் இரட்டை கொலை சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி அருகே காமராஜர் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 32), கார்த்திக் (வயது 28) என்ற இருவரும், வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் வேலையைக் செய்து வந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சம்பவத்தன்று இரவு, அடியார் குளக்கரையில் கண்ணன் தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அவருடைய தம்பி கார்த்திக் அருகே இருந்தாலும், சற்று விலகி அமர்ந்து செல்போனில் எதையோ பார்வையிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல், கண்ணனை குறிவைத்து வெட்டத் தொடங்கியது. தம்பி கார்த்திக் ஓடி வந்து தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரும் அந்த கும்பலின் தாக்குதலுக்கு இலக்கானார். இருவரும் பலத்த காயங்களுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த ஆவுடையார்கோவில் காவல் துறையினர் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது. மர்ம கும்பலின் பின்னணி என்ன? என்ன காரணத்தால் இத்தகைய தாக்குதல் நடந்தது என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஆவடியார் கோவில் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இல்லாமல் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குற்றவாளி விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Read more: 25 பேர் பலி.. பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல், வெள்ளம்.. 2.78 லட்சம் மக்கள் இடம்பெயர்வு..!!