கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகம் அழிந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த இளைஞர், தற்போது அந்த “அழிவு நாள்” தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எபோ ஜீஸஸ் அல்லது எபோ நோவா என அழைக்கப்படும் இவர், கானாவைச் சேர்ந்த 30 வயது நபர். கடந்த சில மாதங்களாக அவர், “கடவுளிடமிருந்து எனக்கு நேரடியாக தரிசனம் கிடைத்துள்ளது. டிசம்பர் 25 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்து, உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும்” என்று கூறி வந்தார். இது பைபிளில் வரும் நோவாவின் பெருவெள்ளம் போல இருக்கும் என்றும், அதற்காக தானே “நவீன நோவா”வாக மாறி கப்பல்கள் கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
டிக்டாக், யூ டியூப், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த வீடியோக்களில், மரத்தால் செய்யப்பட்ட பெரிய கப்பல்கள் உருவாக்கப்படுவதை காண முடிந்தது. “கடவுளின் உத்தரவின்படி இவற்றை கட்டுகிறேன். இந்த கப்பல்களில் தங்கி நான் உயிர் பிழைப்பேன்” என்று அவர் முன்பு கூறியிருந்தார்.
“என்ன நடக்கும் எப்படி நடக்கும் “ என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூட, வரவிருக்கும் பேரழிவின் முழு விவரங்களையும் கடவுள் தனக்குச் சொன்னதாக கூறினார். இந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றன. சிலர் இவரை நம்பி ஆர்வத்துடன் பார்த்தாலும், பலர் இதை கேலி செய்து விமர்சித்தனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று உலகம் முடியும் என்ற அவருடைய கணிப்பு நடக்காததால், தற்போது வெளியிட்ட புதிய வீடியோவில் அவர், “கடவுள் மனிதகுலத்திற்கு மேலும் நேரம் அளித்துள்ளார். அதனால் அந்த அழிவு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான் என் தயாரிப்புகளை இன்னும் பெரிதாக விரிவுபடுத்த வேண்டும் என்று கடவுள் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு புதிய விவாதம் வெடித்துள்ளது. “உலக அழிவு” குறித்த அவரது இந்த புதிய விளக்கம் உண்மையா, அல்லது கவனத்தை ஈர்க்கும் முயற்சியா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
அவர் வெளியிட்ட வீடியோக்களில் காணப்படும் “நவீன நோவாவின் பேழைகள்” பைபிளில் வர்ணிக்கப்பட்ட உண்மையான நோவாவின் பேழையைப் போல பெரிதாக இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். பைபிள் ஆதியாகமத்தில் கூறப்படுவதுபோல், அந்தப் பேழை சுமார் 500 அடிக்கு மேல் நீளமுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் எபோ நோவா காட்டிய பேழைகள் அதற்கு மிகச் சிறிய அளவில் இருந்தன.
மேலும், அவற்றில் இயந்திரங்கள், வழிநடத்தும் அமைப்புகள் (navigation systems), மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பெய்யும் மழை போன்ற பெரும் பேரழிவை தாங்கும் வலிமையான கட்டமைப்பு ஆகியவை எதுவும் இல்லை என்பதும் கேள்விக்குறியாக எழுந்தது.
அவரது கணிப்புகளுக்கு எந்த விஞ்ஞான ஆதாரமும், வானிலை ஆய்வு ஆதாரமும் இல்லாதபோதும், எபோ நோவாவுக்கு ஒரு சிறிய ஆனால் தீவிரமான ஆதரவாளர் கூட்டம் உருவானது. அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் பலர் அவரது நோக்கத்தை சந்தேகத்துடன் பார்த்தனர். இந்தப் பேழை திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பணமும் வளங்களும் மனிதாபிமான உதவிகளுக்கு செலவிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட தனது புதிய வீடியோவில், முன்பு அறிவித்த பேரழிவு தற்போது ஒத்திவைக்கப்பட்டதாக எபோ நோவா கூறினார்.
“கடவுள் நமக்கு இன்னும் நேரம் கொடுத்துள்ளார்,” என்று அவர் கூறியதுடன், “ரட்சிப்பை நாடும் அனைவரும் தங்கும் வகையில் இந்தப் பேழை திட்டத்தை விரிவுபடுத்துமாறு தனக்கு கடவுள் உத்தரவிட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மீண்டும் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதைக் குறித்து மற்றவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Read More : உலகின் மிகவும் விஷம் நிறைந்த பறவை..! அதைத் தொட்டால் மரணம் உறுதி..!



