மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் திருமண அட்டை மோசடியில் சிக்கி ரூ.1.9 லட்சத்தை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊழியருக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு திருமண அழைப்பிதழ் வாட்ஸ்அப்பில் வந்தது. அந்தச் செய்தியில் திருமண தேதி, வாழ்த்துச் செய்தி மற்றும் டிஜிட்டல் திருமண அட்டை (PDF வடிவில்) அனுப்பப்பட்டது. உண்மையில் அது PDF அல்ல; தீங்கிழைக்கும் APK கோப்பு.
அவர் அதைக் கிளிக் செய்தவுடன், அந்தக் கோப்பு மொபைலில் நிறுவப்பட்டது. நிறுவப்பட்டதும் மோசடி செய்பவர்கள் அவரது மொபைல் முழுமையான கட்டுப்பாட்டையும் பெற்றனர். சில நிமிடங்களில் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.9 லட்சம் பறிக்கப்பட்டது.
ஊழியர் புகார் அளித்ததையடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், தெரியாத எண்களிலிருந்து வரும் கோப்புகளைத் திறக்க வேண்டாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் குற்றங்களைத் தவிர்க்க முக்கிய குறிப்புகள்:
* தெரியாத எண்களில் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
* அனுப்பிய எண் உங்களுக்கு தெரிந்ததா என்பதை Truecaller போன்ற செயலிகள் மூலம் சரிபார்க்கவும்.
* APK கோப்புகளை Google Play Store தவிர வேறு எங்கிருந்தும் நிறுவ வேண்டாம்.
* சந்தேகத்திற்கிடமான கோப்பை கிளிக் செய்திருந்தால் உடனடியாக வங்கி கடவுச்சொற்களை மாற்றவும்.
* உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930-க்கு அழைக்கவும் அல்லது தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும்.
* இதுபோன்ற மோசடிகள் மூலம் மொபைல் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் இருப்பதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
Read more: தமிழகத்தில் செப்.5 பொது விடுமுறை.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!