ஷேக் ஹசினா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அந்த கொடூர வன்முறைக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, வங்கதேசம் மீண்டும் பதட்டத்தில் உள்ளது. சமீபத்தில் தலைநகர் தாக்கா மற்றும் பல முக்கிய நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தாக்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீது நடந்த வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு, பங்களாதேஷ் மீண்டும் பதற்றத்தில் உள்ளது. ஹசினாவின் முன்னாள் ஆட்சி கட்சியான அவாமி லீக், ஹசினா மீது நடைபெறும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ‘லாக் டவுன்’ (முழு முடக்கம்) அறிவித்துள்ளது.
இந்த வழக்குகளில், கொலை உள்ளிட்ட மனித நேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ஆளுங்கட்சியான ஆவாமி லீக் (Awami League), இந்த வழக்குக்கு எதிராக டாக்கா உள்ளிட்ட நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள், டாக்கா, முன்ஷிகஞ்ச், தங்கைல் மற்றும் ஹசினாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் ஐந்து காலியான பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டாக்காவில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் பல முக்கிய நகரங்களில் வன்முறை மீண்டும் வெடித்துள்ளது. சமீபத்திய அரசியல் பதற்றம் காரணமாக தீவைத்தல் மற்றும் கச்சா குண்டு வெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தலைநகர் முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பங்களாதேஷ் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை (BGB), மற்றும் கலவரக் காவல் துறையினர் தாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய (ICT) வளாகத்தைச் சுற்றி கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிலையமைப்பு மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சத்தில், அதிகாரிகள் நாடு முழுவதும் அதிக எச்சரிக்கை நிலையை தொடர்ந்து வைத்துள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் செவ்வாய்கிழமை காலை தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளூர் ஊடகமான தி டெய்லி ஸ்டார் தெரிவித்ததன்படி, முதல் வெடிப்பு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான கிராமீன் வங்கி தலைமையகத்தின் முன்பாக ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுமார் 17 இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்று செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரிகள், குருக்கள் தங்கும் இல்லம் அருகே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்புகளுக்குப் பின்னர், ஷாஜாத்பூர் மற்றும் மெருல் பத்தா பகுதிகளில் பேருந்துகள் தீவைக்கப்பட்டன. இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி இருந்தன. ஆனால் சிலர் வழக்கம்போலவே வேலைக்குச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். ஒரு பயணி உள்ளூர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், “விதவிதமான வதந்திகள் கேட்கிறோம், ஆனால் மக்கள் வழக்கம்போல் வெளியே செல்கிறார்கள். எங்களுக்குள் பயம் இல்லை,” என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா வழக்கை எதிர்த்து ஆவாமி லீக் கட்சி அறிவித்த ‘நாடு தழுவிய முழு அடைப்பு அறிவிப்பு தாக்காவில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது, நகரம் முழுவதும் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
டாக்கா காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசியல் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ள ஆவாமி லீக் கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்களின் சுற்றுவட்டாரத்தில் அனைத்து வகையான பொது கூடுகைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷேக் ஹசினா வழக்கின் தீர்ப்பு நவம்பர் 17-ஆம் தேதி – பங்களாதேஷ் தேர்தலுக்கு முன் பரபரப்பு
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான வழக்கின் தீர்ப்பு நவம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கை விசாரித்து வரும் பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICT) தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.
தற்போதைய பரபரப்பான சூழல், ஹசினா வழக்குடன் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையும் முன்னிட்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வன்முறை மற்றும் போராட்டங்களுக்கு பிறகு, ஹசினா இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
அதன்பின் அவர் பல இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் பங்களாதேஷ் பிரதம ஆலோசகர் முகம்மது யூனுஸ் மீது கடும் விமர்சனங்கள் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுவே யூனுஸ் மற்றும் ஹசினா அணிகளுக்கு இடையே அரசியல் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஹசினா பதவிநீக்கம்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று கடுமையான வன்முறைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அந்த கலவரங்களில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் 14,000 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் சுகாதார ஆலோசகர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், மோதல்களில் சுமார் 1,400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டது. இந்த வன்முறைகளே பங்களாதேஷ் அரசியல் நிலைமையை சீர்குலைத்த முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
Read More : உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவம் கொண்ட டாப் 10 நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம்?



