அரசு ஊழியர்களுக்கு நிம்மதி பெருமூச்சு! சர்ச்சை உத்தரவை வாபஸ்! இடைக்கால ஓய்வூதியம் உறுதி!

Chennai Secretariat 2025

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து, ‘டாப்ஸ்’திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கான இடைக்கால ஓய்வூதிய பிடித்தம் செய்யும் சர்ச்சைக்குரிய உத்தரவை தவெக அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. ஜூன் 16ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முந்தைய அரசாணையின்படியே முழு ஓய்வூதியம் மற்றும் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் என நிதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2025 ஜனவரி 4 அன்று அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ (TAPS) அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்த சூழலில், இத்திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்கும் அரசாணை கடந்த ஜூன் 16 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் ஓய்வுபெற்ற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அத்தொகையுடன் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டு வந்தது. பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் 11 அன்று நிதித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒரு புதிய நிபந்தனை புகுத்தப்பட்டது. 10 முதல் 18 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் கணக்கிடப்படாது என்றும், அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே கூடுதல் தொகையாக 30 சதவீதம் வழங்கப்பட்டிருந்தால், அந்த கூடுதல் பணத்தை செப்டம்பர் மாதம் முதல் 10 சம தவணைகளில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பழைய சலுகை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த திடீர் மாற்றத்திற்கு ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கின. அக்டோபர் 15 அன்று அரசு கல்லூரி ஆசிரியர்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு கடுமையான அழுத்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து, நிதித்துறை முதன்மைச் செயலாளர் அருண் ராய், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், செப்டம்பர் 11 அன்று பிறப்பிக்கப்பட்ட கடுமையான அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 அரசாணையின்படி, 10 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியான ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அத்தொகையுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட பிடித்தம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், இடைக்கால ஓய்வூதியத் தொகைக்கும் இறுதி விதிகளின்படி வர வேண்டிய தொகைக்கும் ஏதேனும் வேறுபாடு இருந்தால் அது பின்னர் முறைப்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி பின்வாங்கலால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : ஓபிஎஸ் மட்டும் எதுக்கு? சேகர்பாபுவையும் அதிமுகவில் சேர சொல்லுங்க! எஸ்பி வேலுமணிக்கு அதிமுக கண்டனம்! மீண்டும் வெடிக்கும் போர்!

You May Like