அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனிடையே செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனை நேற்று இரவு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றுபட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்துவரும் செங்கோட்டையனை நேற்று இரவு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதுவரை தொலைபேசி மூலமாக மட்டுமே பேசி வந்த ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஓரிரு நாட்களில் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இரு தரப்பும் நேற்று ஆலோசனை செய்துள்ளன. இதில் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.