மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டமாலா கிராமத்துக்கு அருகே உள்ள இந்திரயானி ஆற்றின் மீது அமைந்திருந்த பழைய இரும்புப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்திரயானி ஆறு என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளம்.. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடியது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் விழுந்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறையும், அவசரகால மீட்புப் படைகளும் இணைந்து தீவிர தேடல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் காரணமாக, இந்திரயானி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் காவல்துறை வாகன போக்குவரத்துக்கும் பொதுமக்கள் அணுகலுக்கும் தடை விதித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இந்த பாலம் பழையதாக இருந்ததா? பராமரிப்பு பிழையா? அல்லது அதிக மக்களும் இரும்புப் பாலத்தில் நின்றதன் ஏற்பட்ட அழுத்தமா? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: பேசாமல் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்..!! – பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்