சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, பர்தா அணிந்து சந்தேகப்படும்படியாக நடந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரை விசாரித்தபோது, பர்தா அணிந்த பெண் வேடத்தில் வந்தது ஆண் என தெரியவந்தது. அவர் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரியவந்தது. போலீசார் அவரை சோதனை செய்த போது அவரது பையில் இரண்டு கொடுவாள்கள் மற்றும் ஒரு கத்தி இருந்தன.
பிரபல தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.72,000 சம்பளம் பெற்று வந்த கரண், ஷேர் மார்க்கெட் முதலீடு மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.24 லட்சம் இழந்துள்ளார்.
மேலும் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதாந்திர EMI செலுத்தி வந்த நிலையில் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி வந்தது தெரிய வந்தது.
இந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்த அவர், முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது காதலியை பார்த்து பேசிவிட்டு தற்கொலை செய்யலாம் என முடிவு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதற்காகவே கத்தியையும் கொடுவாள்களையும் எடுத்து, பர்தா அணிந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துள்ளார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, தலைமை நீதிபதி பாண்டியன் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், உறவினர் ஒருவருடன் நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிட்டார். இதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். கையில் கத்தியுடன் பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஆண் ஒருவர் பல்கலை கழக வளாகத்தில் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.