ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் சதி காரணமாக 7 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமர் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரவீன் குமார் மோடி அளித்துள்ள தகவலின்படி, இந்தச் சம்பவம் செப்.30ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.
தசரா திருவிழாவை காண மர்தான் மோரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர் அழைத்துள்ளார். அங்கு அந்தப் பெண் சென்றபோது, இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அப்பெண்ணை சோனா துங்ரி ருக்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அங்கு மேலும் இரண்டு நபர்கள் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து அந்த இளம்பெண்ணை பூண்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலும் 3 நபர்கள் அவரை வன்கொடுமை செய்துள்ளனர்.
கடைசியாக, பூண்டுவில் இருந்து அந்தப் பெண்ணை ராஞ்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு நபர் அவரை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இறுதியில், அந்த நபர்கள் அவரை தாமர் பகுதியில் உள்ள மர்தான் மோரில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 7 பேர் மீது தாமர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்ற 3 பேர் யார் என்பது குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.