துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய், உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் சில வருடங்கள் கழித்து ஆளே அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று ரசிகர்கள் தேடும் நிலையில்தான் பல நடிகர்களின் நிலைமை இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் அபிநய்.
இவர் நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார் முதல் திரைப்படம் அபிநய்க்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ஒரு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அதிலும் சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்த அபிநய், தான் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதாகவும் உதவி கோரி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 4 மணியளவில் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



