ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பலத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடு முழுவதும் பேரழிவு நிலவுகிறது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்ததாவது, வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, வியாழக்கிழமை அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையம் 34.57°N அட்சரேகை, 70.75°E தீர்க்கரேகை இடங்களில், 10 கி.மீ ஆழத்தில் பதிவானது. அந்நேரம் டெல்லி NCR மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களிலும் அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பாங்கான பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கிராமங்கள் இடிந்து தரைமட்டமாகி, ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். குனார் மாகாணத்தில் மட்டும் 2,205 பேர் உயிரிழந்ததுடன், 3,640 பேர் காயமடைந்தனர். அண்டை நங்கர்ஹார் மற்றும் லக்மான் மாகாணங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள், மோசமான சாலை நிலைமைகள், தொடர்ச்சியான பாறை சரிவுகள், பின்னதிர்வுகள் காரணமாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான், இந்திய மற்றும் யூரேசிய நிலப்பகுதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபரில், ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு ஒரு வருடம் முன்பு, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 1,000 உயிர்களைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.
Read more: தொப்புளில் ஆயில் மசாஜ் செய்வதால் இத்தனை நன்மைகளா..? எந்த எண்ணெய் பெஸ்ட் தெரியுமா..?