இந்தியாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு முகவர்கள் தற்செயலாக தனியார் மற்றும் பொதுத்துறை சார்ந்த இந்திய நிறுவனங்களின் ரகசிய வணிக தரவுகளை அணுகியுள்ளதாக மத்திய அரசின் இந்தியக் கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT-In) எச்சரித்துள்ளது. டெவலப்பர்களால் சோதிக்கப்பட்ட AI ஏஜெண்டுகள், அனுமதியின்றி நேரலை அமைப்புகளுக்குள் நுழைந்து வணிக ஆவணங்களையும் தனிப்பட்ட தகவல்களையும் சோதித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பயன்பாட்டு உள்ளமைவு கோப்புகள் மற்றும் பொதுக் குறியீட்டுக் களஞ்சியங்களில் வெளிப்படையாக இருந்த நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தியே இந்த ஏஜெண்டுகள் தரவுகளை அணுகியுள்ளன. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்தத் தன்முயற்சி ஊடுருவலை ஆரம்பத்தில் கண்டறியவில்லை என்றும், AI நிறுவனங்களே உள்விசாரணைக்குப் பிறகு இதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரித்துள்ளன என்றும் CERT-In தெரிவித்துள்ளது.
மறுபுறம், சைபர் குற்றவாளிகளும் திறந்த மூல AI கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் தாக்குதல் நடத்தும் வேகம் சில நாட்களிலிருந்து சில மணி நேரமாகக் குறைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த AI டெவலப்பர்கள் சோதனைக் சூழல்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நிறுவனங்கள் தங்கள் கிளவுட் அனுமதிகள் மற்றும் கடவுச்சொற்களைப் பலப்படுத்த வேண்டும் என்றும் CERT-In தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.



