செயற்கை நுண்ணறிவு (AI) பல பணிகளை எளிதாக்கியுள்ள நிலையில், அதன் ஆபத்தான அம்சங்கள் குறித்து பெரிய கூற்றுக்களும் எச்சரிக்கைகளும் அவ்வபோது மனிதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், முன்னாள் கூகுள் நிர்வாகி மோ கவ்டட், AI இன் எதிர்காலம் குறித்து கூறிய கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்வரும் 15 ஆண்டுகளில், AI மனிதர்களுக்கு நரகமாக இருக்கும் என்றும், அதன் மோசமான கட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
AI வேலைகளை நீக்கும், சமத்துவமின்மையை அதிகரிக்கும்: The Diary of a CEO என்ற பாட்காஸ்டில் மோ கவ்டட் பேசியதாவது, முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி, திறன் மற்றும் பட்டங்களுக்கு அடிப்படையாக உள்ள வெள்ளைக் காலர் வேலைகளையே (white collar jobs) அழிக்கத் தொடக்கும் என்று தெரிவித்தார். அதாவது, ஆட்கள் அறிவாற்றல் அடிப்படையில் செய்யப்படும் பணிகளை ஏஐ முதலில் பாதிக்கும் என்று கூறினார். மேலும், அவர் கூறுகையில், தனது சொந்த AI அடிப்படையிலான நிறுவனமான Emma.love என்ற நிறுவனம் முன்பு 350 பேரால் நடத்தப்பட்டது, ஆனால், இப்போது 3 பேர் மட்டுமே போதுமானது என்று கூறினார்.
பணக்காரர்களும் சக்திவாய்ந்தவர்களும் மட்டுமே AI-ஐப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார். ஏழைகளும் சாமானிய மக்களும் தங்கள் வேலைகளை இழப்பார்கள். இது படிப்படியாக நடுத்தர வர்க்கத்தை நீக்கி சமூகத்தில் ஒரு பெரிய பிரிவை உருவாக்கும் என்று கூறினார்.
மக்கள் வேலை இழக்கும்போது, அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, வாழ்க்கையின் நோக்கத்தையும் இழப்பார்கள் என்று மோ கவுடத் எச்சரித்தார். இது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும், தனிமையை அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் பதட்டங்களையும் பிளவுகளையும் ஆழப்படுத்தும். அரசாங்கங்களும் சமூகமும் இன்று AI தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், வரும் ஆண்டுகளில் நிலைமை மோசமடையக்கூடும்.
இருப்பினும்,இந்த மோசமான கட்டம் 2040 வரை நீடிக்கும் என்றும், அதன் பிறகு செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்த சகாப்தத்தில், மக்கள் மீண்டும் மீண்டும் நிகழும் மற்றும் சலிப்பூட்டும் பணிகளிலிருந்து விடுபட்டு, அன்பு, ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையை நோக்கி நகர்வார்கள், ஆனால் இன்றிலிருந்து சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதுதான் இவை அனைத்தும் சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.