இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், நியமிக்கப்பட்ட மையங்களில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வுகள் மூலம் குறைந்த கட்டணத்தில் இதைப் பெறலாம்.
கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான செயற்கை நுண்ணறிவு மற்றும் நடைமுறை கருவிகளைப் பெற ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்தப் பாடத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகள், செயற்கை நுண்ணறிவு கல்வியை உள்ளடக்கியதாகவும், அனைத்துத் துறைகளிலும் அணுகக்கூடியதாகவும் உள்ளன. இவை பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், கலை, அறிவியல், வணிகம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த கற்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்வில், புதிய செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் காமகோடி தொடங்கி வைத்தார். விளக்கங்கள் தேவைப்படுபவர்கள் pmu-sp@swayam2.ac.in என்ற முகவரிக்கு எழுதலாம். ஆறு படிப்புகளுக்கும் பதிவு செய்வதற்கான கடைசி தேதி, 2025 அக்டோபர் 10 ஆகும். விவரத்துக்கு https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணைப்பை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது