அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட கட்சி ஆகும். அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆர் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுகவின் 54-ம் ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்; மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அதிமுக, அக்டோபர் 17-ம் தேதி 54-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்டோபர் 17, 18-ம் தேதிகளில், கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதற்கான இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 17-ம் தேதி சேலத்தில் நான் உரையாற்றுகிறேன். மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களுக்கான நிகழ்ச்சிகளை அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.