அஜித் குமார் வழக்கில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே காவலர்கள் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். சிபிஐ தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், இன்றைய உயர்நீதிமன்ற விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் ”சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கும், சாத்தான்குளம் வழக்கும் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.
ஆகையால், தமிழகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கொண்டு இந்த விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவித்தோம். சிபிஐ விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக இருந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more: நாளை பாரத் பந்த் : ஜூலை 9 ஆம் தேதி பள்ளிகள் மூடப்படுமா? முழு விவரம் இதோ..