அஜித்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2 நாட்களாக மதுரை மாவட்ட நீதிபதி இதுகுறித்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம், அஜித் மீது புகாரளித்த நிகிதாவே மிகப்பெரிய மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பலரை ஏமாற்றி அவர் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நிகிதா தனது தாயாருடன் தலைமறைவாகி விட்டதாக வெளியாகி உள்ள தகவல் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்ததில், காவல் துறையினரின் தாக்குதல் தொடர்பாக பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. நீதிபதிகள், அரசு மற்றும் காவல்துறையினரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
அஜித் குமாரை சித்திரவதை செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? எந்த விதிகளும் இன்றி சிறப்பு படை விசாரணைக்கு உத்தரவிட யார் அதிகாரம் கொடுத்தது? என்று அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அஜித் குமார் மரணம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அந்த உத்தரவுப்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து சாட்சியங்களை விசாரணை செய்து வருகிறார். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் எந்தவித அச்சமும் இன்றி நீதிபதி முன்பு சாட்சியம் அளிக்கலாம். வரும் 6 ஆம் தேதி வரை அஜித் கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்துவார் என தெரிவித்தார்.
Read more: டீ குடிப்பதை நிறுத்தினால் ரூ.84 லட்சம் சேமிக்கலாம்..! எப்படி தெரியுமா..? ஷாக் ஆகாம படிங்க..