மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா பகுதியில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலில் இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான சலுகைகளை கோரியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில், பால்கர் பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காவலில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, ராஜேஷ் ஜாதவ் என அடையாளம் காணப்பட்ட உதவி காவல் ஆய்வாளர், கைது செய்யப்பட்ட பெண்ணிடம், “உங்கள் மகளை என்னிடம் அனுப்புங்கள்; நான் உங்களுக்கு ரூ. 10,000 வழங்குவதுடன், இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற உதவி செய்வேன்” என்று கூறுயுள்ளார்.
பாலியல் ரீதியான சலுகைகளை கோரியதாக கூறப்படும் இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை ஒரு மூத்த காவல்துறை அதிகாரி நேரில் சந்தித்து கடுமையாக கண்டிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



